மனித மூளை மிக அற்புதமானது. அதன் பணிகள், நினைவுத்திறன்கள், புத்திசாலித்தனம் ஆகியவை பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. மூளை தொடர்பாக ஆய்வு நடத்தி வரும் விஞ்ஞானிகளுக்கு ஒவ்வொரு நாளும் புதிய புதிய ஆச்சரியங்களை ஆய்வு முடிவுகள் தருகின்றன. சமீபத்தில் விஞ்ஞானிகளை ஆச்சரியப் படுத்திய கண்டு பிடிப்பு ‘மூளையில் போதை தரும் சத்துக்கள் சுரக்கின்றன’ என்பதுதான்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மவுண்ட் சியானி மருத்துவப் பள்ளியில் இது குறித்து ஆய்வுகள் நடந்து வருகிறது. டாக்டர் லட்சுமி தேவி தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில் மூளையில் போதை தரும் புரோட்டின் சுரப்பது கண்டு பிடிக்கப்பட்டது இது குறித்த தகவல்கள் வருமாறு:

மனித உடலில் தோல் பகுதியில் வலியை மறக்கச் செய்யும் புரோட்டின்களை உற்பத்தி செய்யும் செல்கள் இருப்பது ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த செல்கள் காரணமாகத்தான் அடிப்பட்ட உடன் வலியை சிறிது நேரத்துக்குள் மறக்க முடிகிறது. இது வலியின் அளவு குறைந்த பட்சம் இருக்கும் வரை செயல் படுகிறது. இதை அடிப்படையாக வைத்து மூளையின் செயல்பாடுகள் குறித்தும் வலியின் போது அதை மூளை எப்படி எதிர்கொள்கிறது என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இந்த ஆய்வின் போது எலியின் மூளையை பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டனர். அப்போது மூளையில் வலியை மறக்கச் செய்யும் புரோட்டீன் சுரப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது ‘மரிஜுனா’ போன்ற போதை பொருள் போன்ற ரசாயனக் கலவை கொண்டதாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்தது. இந்த புரோட்டீனில் உள்ள ராசாயன கலவைகளை பிரித்தறியும் ஆய்வுகள் நடந்து வருகிறது. இதன் அடிப்படையில் வலி நிவாரண மருந்துகளை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த மருந்துகள் மூலம் அறுவை சிகிச்சை மற்றும் விபத்துக்களின் போது நோயாளிகளுக்கு வலியை மறக்கச் செய்ய முடியும் என்பது மருத்துவர்களின் கருத்தாகும். தற்போது ஆய்வு நிலையில் உள்ள இந்த கண்டு பிடிப்பு விரைவில் மனித இனத்துக்கு பயனுள்ள வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vinodhan,

Shopping Cart