ஒரேயடியாகக் கவலைகளை ஒழித்துக் கட்ட முடியவில்லையா? கவலையே படாதீர்கள். கவலையை விரட்டுவதற்கும் பயிற்சிகள் இருக்கிறது. இதற்கு உங்களுக்குப் பொறுமை இருப்பது அவசியம்.கவலையை விரட்டும் பயிற்சிகளைக் கவனமாகச் செய்து வந்தால் உங்களுக்குக் கை மேல் பலன் கிடைக்கும்.இந்த நிமிடத்தில் உங்களுக்கு ஒரு சுவலை இருக்கிறது என்போம்.அதையே நினைத்துக் கொண்டு அறைக்குள் அடைந்து கிடக்காதீர்கள். வெளியே கொஞ்ச தூரம் நடந்து விட்டு வாருங்கள். அல்லது ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் போய் வாருங்கள். கால்பந்தாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.உடற்பயிற்சி செய்யப் பாருங்கள். சமையலறைக்குள் புகுந்து புதிதாய்ஒரு பண்டத்தைத் தயாரிப்பதில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். அதில்உங்கள் கை வண்ணத்தைக் காட்டுங்கள்.கவலை கவலை என்று கவலைப்பட்டுக் கொண்டே இருக்காமல் உங்கள் சிந்தனையைத் திசை திருப்புங்கள். கவலை கனவு போல் கலைந்து போகும். கவலையை உடனே ஓட்ட வேண்டுமா? அதற்கு எளிமையான ஒருவழி இருக்கிறது. உங்களுக்கு எந்தச் செயல் மிகவும் பிடிக்குமோ அதைச் செய்யுங்கள்.உங்கள் செல்ல நாயைக் கொஞ்சுங்கள்.ஓவியம் வரையுங்கள்.இசை கேளுங்கள்.விளையாடுங்கள். இதில் எதில் உங்களுக்கு அதிக விருப்பமோ அதைச்செய்யுங்கள்.

துன்பம் வரும் வேளையில் சிரிக்கத் தெரியுமா? உங்களை நீங்களே கேலி செய்து சிரிக்கக் கற்றுக் கொண்டு இருக்கிறீர்களா? இவையெல்லாம் தெரிந்திருந்தால் உங்கள் கவலைகளில் பெரும்பாலானவற்றை இந்த வகையில் விரட்டி விடலாம்.நல்ல நகைச்சுவை உணர்வு கொண்ட நண்பர்களுடன் உரையாடுங்கள். நகைச் சுவைப் படங்களைத் திரையரங்குகளிலோ சின்னத் திரையிலோ கண்டு களியுங்கள் இதில் நேரம் வீணாவதாகக் கவலைப்படாதீர்கள். சிரிப்பு கவலையைப் போக்கும் சிறந்த மருந்து.உங்கள் கவலைகள் உங்களிடமே தேங்குவதற்கு அனுமதிக்காதீர்கள். உங்கள் கவலைகளுக்குச் சரியான வடிகால் வேண்டும். இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. அது உங்கள் கவலைகளை மற்றவர்களிடம் கொட்டுவதுதான்.நீங்கள் சொல்வதைப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்பவர்களிடம் உங்கள் கவலைகளைச் சொல்லுங்கள் அதே சமயம்தங்கள் கவலைகளை உங்கள் மேல் திணிப்பவர்களைத் தவிருங்கள். உங்களுடைய கவலைகளைக் காது கொடுத்துக் கேட்டு உங்களுக்கு சொல்லப்படும் ஆறுதலான ஒரு வார்த்தை உங்களது ஆயிரம் டன் சுமையையும் பஞ்சு போல் பறக்கச் செய்து விடும்.

அத்தகைய வார்த்தையைச் சொல்லக் கூடியவர் யார்?உங்கள் மனைவி? கணவர்? அப்பா? தாத்தா? நண்பர்? அதிகாரி? யாராக இருந்தாலும் அவர்களிடம் உங்கள் கவலைகளைக் கொட்டுங்கள். இதனால் உங்கள் மனச் சுமை இறங்கும். கவலைகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறையும்.ஓய்வெடுக்கத் தெரியுமா உங்களுக்கு? நீங்கள் எடுக்கும் ஓய்வு உங்கள் உடலை அமைதிப்படுத்த வேண்டும். குப்பை போன்ற எண்ணங்கள் (பெரும்பாலும் கவலைகள்) நிறைந்து கிடக்கும் உங்கள் மனதை அது சுத்தம் செய்யவேண்டும்.இப்படி ஓய்வெடுப்பது உங்கள் கவலைகளை மறக்க வைக்கும் உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகா போன்றவற்றைக் கற்றுக் கொள்ளுங்கள். இவற்றைப் பயிற்சி செய்யுங்கள். பின்னர் தவறாமல் செய்து வாருங்கள். உங்கள் கவலைகள் மறையும்.

முற்றிலும் பற்றற்ற துறவியைப் போல் நடந்து கொள்ள உங்களால் முடியுமா? அந்த நிலையை எட்டுவது உடனே சாத்தியமாகி விடாது. என்ன நடந்தாலும் நடப்பது நடக்கட்டும்.. நான் கவலைப்படுவதைக் குறைத்துக் கொள்வேன் என்று உங்களுக்குள்ளேயே சொல்லிக் கொள்ளுங்கள். வெற்றி உங்களுக்கே.கவலைப்படுவதைக் குறையுங்கள்.கவலையோடு இருக்கும் மற்றவர்களுக்கும் காது கொடுங்கள்.உங்களைச் சுமை தாங்கியாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.மற்றவர்களின் சுமைகள் உங்கள் மேல் இறக்கி வைக்கப்படஉதவுங்கள்.உங்களைத் தேடி வருபவர்கள் அதிகரிப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் ஆறுதல் அளிப்பவராக மாறுவீர்கள். இப்போது நீங்கள் பற்றற்ற நிலையை எட்டிவிட்டீர்கள். இனி என்ன?

vinodhan,

Shopping Cart